Skip to main content

‘இந்தியா..’ - பாஜகவிற்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Pakistan's decision to claim the name India

 

வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து 20வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா புறப்படுகிறார். இந்த பயண நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல் குறிப்பில் இந்திய பிரதமர் என்பதற்குப் பதிலாக ‘பாரத பிரதமரின் இந்தோனேசிய பயண நிகழ்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டு நிகழ்ச்சி நிரல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இதுகுறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, பாரத் என்ற பெயருக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், கிரிக்கெட், ரயில் போன்ற பலவற்றையும் ஆங்கிலேயர்கள்தான் கொடுத்தார்கள். அதனால் அனைத்தையும் மாற்றிவிடலாமா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

இது ஒருபுறமிருக்க, இந்தியா என்ற பெயர் உங்களுக்கு வேண்டாம் என்றால் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று பாகிஸ்தானில் பலரும் கூறி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியா தனது நாட்டின் பெயரை பார்த் என்று மாற்றினால், ஐ.நாவில் இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோர வேண்டும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே இண்டஸ்(Indus) எனும் பகுதி பாகிஸ்தானில் இருப்பதால், அதனைக் குறிக்கும் வகையில் இந்தியா பெயரை பாகிஸ்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.