தீவிரவாதிகளே மிகைப்படுத்துகின்றனர்: ஆங் சான் சூகி தகவல்
மியான்மரில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ராணுவத்தினர் மீது ரோஹிங்யா போராளிகள் தாக்குதல் நடத்தினர். எதிர்த் தாக்குதல் என்ற பெயரில் ராக்கைன் பகுதியிலுள்ள ரோஹிங்யா மக்கள்மீது ராணுவம் வன்முறையில் இறங்கியது. இதனால் லட்சக்கணக்கான ரோஹிங்யாக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 800 ரோஹிங்யாக்கள் வரை இத்தாக்குதலில் இறந்துள்ளனர்.
இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் மியான்மரில் நடைபெறுவது இன அழித்தொழிப்பு என கடுமையான தொனியில் குறிப்பிட்டார். இதுவரை ரோஹிங்யாக்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடாத ஆங் சான் சூயி, துருக்கி அதிபருடன் டெலிபோன் உரையாடலில் ஈடுபட்டார். பின் ஊடகங்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில்,
“நாடுகளுக்கு இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த பெருமளவில் தவறான தகவல்கள் தீவிரவாதிகளால் கிளப்பிவிடப்பட்டுள்ளன. அவற்றின் நுனியைத்தான் காண்கிறோம். தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே இச்செய்திகள் அமைந்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்ரெஸ், மியான்மர் வன்முறை இப்படியே நீடித்தால் மனிதாபிமானப் பேரழிவாக மாறிவிடப்போகிறது என கவலைதெரிவித்துள்ளார்.