உலகம் முழுவதும் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. நார்வே நாட்டிலும் கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தநிலையில், நார்வே நாட்டு பிரதமர், தனது 60வது பிறந்தநாளை கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்தினருடன் பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்.
நார்வே நாட்டில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக 10க்கும் மேற்பட்டவர்கள் கூடக்கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், பிரதமர் எர்னா சோல்பெர்க் ஏற்பாடு செய்த பார்ட்டியில் 13 பேர் கலந்துகொண்டனர். அரசின் விதிமுறைகளை நாட்டின் பிரதமரே மீறியது சர்ச்சையாகியது. இதனையடுத்து கடந்த மாதம் அவர் மன்னிப்பு கோரினர்.
இருப்பினும் பிரதமருக்கு அந்த நாட்டு போலீசார், 20,000 நார்வேஜியன் க்ரோனை அபராதமாக விதித்தனர். இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுபோன்ற விஷயங்களுக்குப் பொதுவாக அபராதம் விதிக்கப்படுவதில்லையென்றாலும், கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அரசின் வேலையில் பிரதமர் முன்னணியில் இருப்பதால், அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.