ரோஹிங்கியா அகதிகள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு
பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்ற மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் மீது மியான்மர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இத்துப்பாக்கிச்சூடு பங்களாதேஷ் எல்லையோர பகுதியின் மீது நடத்தப்பட்டுள்ளது.
மியான்மர் ரக்ஹைன் மாநிலத்தில் உள்ள காவல்துறை மற்றும் ராணுவத் தளங்கள் மீது ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இத்தாக்குதலில் மியான்மர் படைகளைச் சேர்ந்த 12 பேரும் ஆயுதக் கிளிர்ச்சியாளர்கள் 77 பேரும் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலிற்கு அராக்கன் ரோஹிங்கியா சல்வேசன் ஆர்மி (Arakan Rohingya Salvation Army) என்ற அமைப்பு டீவிட்டர் தகவல் வழியே பொறுப்பேற்றுள்ளது.
“கண்ணிவெடிகள், வாள், துப்பாக்கிகளைக் கொண்டு மியான்மர் பாதுகாப்பு படையினரை பெங்காலி தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்” என மியான்மர் அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பெங்காலி என்ற சொல் பிரோயகம் ரோஹிங்கியாக்கள் தொடர்பான மியான்மர் அரசின் பார்வையை உணர்த்துவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ரோஹிங்கியா கிராமங்களை முற்றுகையிட்டு அப்பாவி பொது மக்கள் மீது மியன்மர் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாதுகாப்பற்ற நிலைக்காரணமாக ரக்ஹைன் மாநிலத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்று வருகின்றனர். அப்படி பங்களாதேஷ் எல்லையான பந்தர்பன் பகுதியில் காத்துக்கொண்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் மீது மியான்மர் பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ஆகஸ்ட் 26 மதியம் 1.30 மணியளவில் ரோஹிங்கியா அகதிகளை நோக்கி மூன்று முதல் நான்கு முறை வரை சுட்டதாக கூறப்படுகின்றது. “மலைகளில் மறைந்தபடி எல்லைக்கோட்டின் அருகே இருந்து ரோஹிங்கியா மக்களை நோக்கிச் சுட்டனர். இதுகுறித்து மியான்மர் படையினர் எந்த வகையிலும் எங்களிடம் ஆலோசிக்கவில்லை. இதன் காரணமாக எல்லையோரப் பகுதியில் மேலும் பாதுகாப்பு நாங்கள் பலப்படுத்தியுள்ளோம்” என பங்களாதேஷ் எல்லையோரப் படையின் தளபதி மஞ்சூருல் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் அதிகாரிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காக்ஸ் பஜாரில் உள்ள நாப் நதிக்கரையோரத்தின் நான்கு மைல் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், பங்களாதேஷில் ஏற்கனவே நான்கு லட்சம் ரோஹிங்கியா அகதிகள் உள்ளதாகவும் இதன் காரணமாக பெரும் சமூக-பொருளாதார-சுற்றுப்புற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் குறிப்பிட்டுள்ள பங்களாதேஷ் அரசு, இனி எந்த வகையிலும் ரோஹிங்கியா அகதிகளை பங்களாதேஷில் அனுமதிப்பதாக இல்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பங்களாதேஷ் எல்லையான கும்தம் அருகே சிறைப்படுத்தப்பட்ட 70 ரோஹிங்கியா அகதிகள் இன்று மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
“தங்களை மியான்மர் திருப்பி அனுப்ப வேண்டாம் என அகதிகள் எங்களிடம் மன்றாடினர்” என இச்சம்பவத்தை நேரில் கண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பங்களாதேஷ்-மியான்மர் இடையேயான எல்லையில் உள்ள நாப் ஆற்றைக் கடந்த 20 ரோஹிங்கியா அகதிகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ரோஹிங்கியா மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் 1.1 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட ரோஹிங்கியா முஸ்லீம்கள், அந்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மியான்மர் ராணுவத்தினராலும் புத்த பெரும்பான்மையினராலும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் உலகின் பல பகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.