Published on 30/01/2019 | Edited on 30/01/2019

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மிராபி எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவிசார் ஆபத்துத் தடுப்பு மையத் தலைவர் கஸ்பாணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொந்தளிப்புடன் இருந்த மிராபி எரிமலை திடீரென பெரும் சீற்றத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடிப்பின் காரணமாக வெளிவந்த லாவாக்குழம்பு சுமார் 1.4 கிலோமீட்டர் (1400 மீட்டர்) தூரம் ஆறு போல நெருப்பு வெள்ளமாக பாய்ந்தோடியது. 2,968 மீட்டர் உயரமுள்ள மிராபி எரிமலை கடந்த 2010 ஆம் ஆண்டு வெடித்தபோது அந்த நெருப்பு குழம்பிலும், மூச்சு திணறலிலும் மாட்டி 347 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த வெடிப்பிற்கு முன்னரே எரிமலையை சுற்றி 3 கிமீ சுற்றளவில் உள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.