அண்மையில் ''எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக வெளியே கிளம்பி வீட்டுக்கு வர தமிழீழ விடுதலை புலிகள் கை மீண்டும் ஓங்க வேண்டும்'' என்று பேசிய இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தற்போது பதவி விலகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இலங்கை யாழ்ப்பாணத்தில் அண்மையில் அதிபரின் மக்கள் சேவை திட்ட விழாவில் கலந்துகொண்ட இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேசுகையில்,
தமிழர் நிலங்களை திரும்ப கொடுத்த அரசிற்கு நன்றி, இங்கு எல்லோருக்குமே தெரியும் விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்த்தோம் என்று.
வட கிழக்கு மாகாணங்களில் இன்றும் எங்கள் குழந்தைகள் நிம்மதியாக வீட்டை விட்டு வெளியேறி தனது வேலைகளை முடித்துக்கொண்டு நிம்மதியாக வீட்டிற்கு வந்தடையும் சூழல் வேண்டும் என்றால் திரும்பவும் இங்கே தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்க வேண்டும். விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். அவரின் இந்த பேச்சு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த புத்தபிச்சுக்கள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மைத்திர பால சிரிசேனாவிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தனக்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைக்க தான் பதவி விலகுவதாக இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.
இதேபோல் பிரபாகரன் காலத்தில் தமிழ்மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையை கூறுவதால் எங்களை யாரும் பயங்கரவாதிகள் என கூறிவிட முடியாது என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஷ்வரன் தெரிவித்துருந்தார். இந்த கருத்தும் சிங்களர்கள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது.