இணையரின் கைப்பேசியை உளவு பார்க்கும் கணவன் அல்லது மனைவிக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மிக அதிகப்படியான கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு ஆதரவான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
பெண்களுக்கு வாக்குறுமை, காப்பாளரின் அனுமதியின்றி உயர்கல்வி பயிலும் அல்லது தொழில் தொடங்கும் உரிமை, மைதானத்திற்கு நேரில் சென்று போட்டிகளைக் கண்டுகளிக்கும் உரிமை, கார் மற்றும் பைக்குகளை ஓட்டும் உரிமை என பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர் சல்மான். சமீபத்தில் பெண்கள் முகத்திரை அல்லது பர்தா அணிந்துகொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது எனப்பேசி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில், அதிகரித்து வரும் சமூகவலைத்தள மோகம், பயன்பாடு சைபர் குற்றங்களை ஊக்குவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சவுதி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இணையரின் செல்போனை நோட்டமிடும் அல்லது உளவு பார்க்கும் கணவன் அல்லது மனைவிக்கு சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சத்து 33 ஆயிரம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.