ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அதிகரித்துவரும் போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவிவந்த பிரச்சனை, தற்போது உச்சகட்டத்தை எட்டி எந்நேரமும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் என்று உக்ரைனுக்கான இந்திய தூதரக தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், "உக்ரைனில் நிலவும் நிச்சயமற்ற நிலையைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக கட்டாயமாக இங்கிருக்க வேண்டும் என்ற நிலையில் இல்லாத மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேறலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், தற்போதைய தங்களின் நிலை குறித்து இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்துங்கள். தேவையான நேரத்தில் உதவி வழங்கிட அது உதவும் என்றும், உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கும் வகையில் வழக்கம்போல இந்திய தூதரகம் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.