இங்கிலாந்து நாட்டில் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை ஜூன் 21ஆம் தேதி முழுமையாக நீக்க, அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருந்தார். ஆனால் டெல்டா வகை கரோனாவால், தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த மாதம் 19ஆம் தேதிமுதல் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து இன்று (05.07.2021) அவர் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டம் குறித்து அறிவிக்கவுள்ளார். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து வெளியான அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மக்களின் சுதந்திரங்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை இன்று நாம் முடிவு செய்யப்போகிறோம். பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள் வைரஸோடு வாழக் கற்றுக்கொள்ள தொடங்க வேண்டும்" பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"கட்டுப்பாடுகளை நீக்கினால் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதை, சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறிக்கின்றன. ஆனால், தடுப்பூசியின் காரணமாக (கரோனா பாதிக்கப்பட்டவர்கள்) மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும், உயிரிழப்பதும் குறைந்துள்ளது" என பிரதமர் அலுவலகம் ஏற்கனவே கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து விளக்கமளித்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அந்த நாட்டு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.