90 நிமிடங்களில் கரோனா வைரஸ் சோதனை முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையிலான இரண்டு அதிவேக சோதனை முறைகள் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வந்தாலும், இதற்கான பரிசோதனை முறைகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவே இதுவரை இருந்து வருகின்றன. இந்நிலையில், விரைவாகப் பரிசோதனை முடிவுகளைப் பெறும் வகையிலான சோதனை முறைகளைக் கண்டறிய பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெறும் 90 நிமிடங்களில் கரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வகையிலான இரண்டு அதிவேக சோதனை முறைகள் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
லேம்போர் ஸ்வாப் சோதனை மற்றும் டி.என்.ஏ.நட்ஜ் சோதனை என்ற இந்தப் புதிய முறைகளைப் பயன்படுத்தி 60 முதல் 90 நிமிடங்களில் கரோனா சோதனை முடிவுகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக, அடுத்த வாரத்திலிருந்து 4,50,000 லேம்போர் சோதனை உபகரணங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டி.என்.ஏ.நட்ஜ் சோதனை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.