சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் வட கொரிய அதிபர் கிம் நடத்திய ரகசிய சந்திப்பு, கொரிய தீபகற்பத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவிற்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்தார். வடகொரிய அதிபராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மேற்கொள்ளும் முதல் வெளிப்படையான அரசுமுறைப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவுடன் நட்புறவாக இருந்தாலும், அந்நாட்டின் அணு ஆயுதக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டது சீனா. ஐ.நா. கொண்டுவந்த பொருளாதாரத் தடைக்கும் சீனா ஆதாரவளித்தது. இந்நிலையில், கிம் மேற்கொண்ட இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து சீனாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சீன அதிபருடனான இந்த சந்திப்பில், வட கொரிய அதிபர் அணு ஆயுதங்கள் சோதனை நடத்துவதை நிறுத்தி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட உறுதியளித்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதமற்ற போக்கு என்ற எங்கள் முடிவுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன. அமைதியை நிலைநாட்டுவதற்கான எல்லாவிதமான வேலைகளிலும் ஈடுபட இனி முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கிம் தெரிவித்திருந்ததாகவும் சீன பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.