இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த திட்டத்தில், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள துறைமுகங்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்துக்கான வழித்தடங்களை உருவாக்க இந்த திட்டத்தை அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், போன்ற நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து செயல்படுவதாக முடிவு செய்திருந்தது. மேலும், சீனாவின், ‘பெல்ட் அண்ட் ரோடு’ பொருளாதார வழித்தட திட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில் தான் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே, கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், உலக நாடுகள், இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நேற்று (26-10-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஹமாஸ் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனாலும் என்னுடைய உள்ளுணர்வு இந்த தகவலை என்னிடம் சொல்கிறது” என்று கூறினார்.