ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில், தலிபான் வாகனங்களைக் குறிவைத்துக் கடந்த சனிக்கிழமை மூன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையும் ஜலாலாபாத்தில் தலிபான் வாகனத்தைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது ஊடகமான அமாக் செய்தி நிறுவனத்தின் டெலிகிராம் சேனலில், தலிபான் வாகனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும் சனிக்கிழமை அன்று தலிபான்களின் வாகனங்களைக் குறிவைத்து மூன்று தனித் தனி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஞாயிற்றுக் கிழமை தலிபான் வாகனத்தைக் குறிவைத்து ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமாக் செய்தி நிறுவனத்தின் டெலிகிராம் சேனலில் கூறியுள்ள ஐஎஸ்எஸ் தீவிரவாதிகள், இரண்டு நாட்களிலும் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 35க்கும் மேற்பட்ட தலிபான்கள் மரணமடைந்தனர் அல்லது காயமடைந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே மோதல் அதிகமாகும் எனவும், இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருதப்படுகிறது.
ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கடந்த ஆகஸ்ட் இறுதியில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதும், அதற்கு அமெரிக்கப் பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ் கோராசன் அமைப்பினர் யார்..? அவர்களின் பின்னணி என்ன..?