இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், சுமார் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட மூத்த தளபதிகள் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில் இஸ்ரேல் மீது 100 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அயான் டோம்களை தாண்டி இஸ்ரேல் முழுவதும் 1864 அபாய அலாரங்கள் ஒலிக்கப்பட்டன. தலைநகர் டெல் அவிவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக ஈரான் ஆதரவு க்ஹவுதி படையினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜோர்டான் நாட்டில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள சுமார் 28 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் இருந்து கண்காணித்து தங்கள் தேசியப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுகின்றனர். ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உதவுமாறும், இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்கும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துமாறும் அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.