கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று ஐநாவின் உலக மகிழ்ச்சி அறிக்கை (World happiness report) தெரிவித்துள்ளது.
2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐநா உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா 140-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து 7 இடங்கள் சரிந்து இருக்கிறது என்றும் அந்த பட்டியலில் தெரியவந்துள்ளது.
‘உலக மகிழ்ச்சி தினம்’ உலகம் முழுவதும் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு நேற்று மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் ஐநா, உலக மகிழ்வு அறிக்கை - 2019-ஐ வெளியிட்டது.
உலக மக்களின் மகிழ்ச்சியை சுதந்திரம், சமூக ஆதரவு, வருமானம், மக்களின் ஆயுட்காலம், அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, மற்றும் சமத்துவமின்மை ஆகிய காரணிகளை கொண்டு ஐநா கணக்கிட்டுவருகிறது.
அதன்படி இந்தியா இந்த ஆண்டு 140-வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 67-வது இடத்திலும், சீனா 93-வது இடத்திலும், வங்கதேசம் 125-வது இடத்திலும் உள்ளன. உலகளவில் மகிழ்ச்சி குறைந்த நாடாக தெற்கு சூடான் இருப்பதாக அந்தப் பட்டியலில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய மக்கள் கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் மக்களின் மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. ஏற்கெனவே இந்தப் பட்டியலில் வெனிசுலா, ஏமன், சிரியா, போட்ஸ்வானா, ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதிகம் வாக்களிக்க வருவார்கள் என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.