இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் பணியாற்றிவந்தார். தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள், தொடர் தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றிவரும் நிலையில், டேனிஷ் சித்திக் ஆப்கான் இராணுவத்துடன் இணைந்து தங்கி இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்குமிடையேயான மோதல்களைப் பதிவுசெய்துவந்தார்.
இந்தநிலையில் அவர், தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார். ரோஹிங்கியா அகதிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தியதற்காக ஊடக உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதினை வென்றுள்ள டேனிஷ் சித்திக், இந்தியாவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு, ஹாங்காங் போராட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
டேனிஷ் சித்திக் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் பத்திரிகையாளர்களும் தங்களது இரங்கலையும், அவர் கொல்லப்பட்டதற்கு கண்டனத்தையும் தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், டேனிஷ் சித்திக்கின் மறைவிற்கு தாலிபன் வருத்தம் தெரிவித்துள்ளது. தாலிபன் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், "யாருடைய துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. யுத்த வளையத்திற்குள் நுழையும் எந்தப் பத்திரிகையாளரும் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நபரை நாங்கள் சரியான முறையில் கவனித்துக்கொள்வோம்" என கூறியுள்ளார்.
மேலும் ஸபியுல்லா முஜாஹித், "இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்ததற்காக நாங்கள் வருந்துகிறோம். ஊடகவியலாளர்கள் எங்களுக்குத் தெரிவிக்காமல் யுத்த வளையத்திற்குள் நுழைவது குறித்து வருத்தப்படுகிறோம்" எனவும் கூறியுள்ளார்.