இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளை உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அந்தவகையில், ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்ட் எனும் பெயரில் தயாரித்து வரும் சீரம் நிறுவனம், அமெரிக்காவில் நோவாவாக்ஸ் என்ற மருந்து நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பூசியை இந்தியாவில் குறைந்த அளவில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், நோவாவாக்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வரும் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட ஆராய்ச்சி தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக தங்கள் தடுப்பூசிக்கு 90.4 சதவீதம் செயல்திறன் உள்ளது என நோவாவாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. கவலை தரும் மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிராக 93 சதவீத செயல்திறனும், சாதாரண வகை மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிராக 100 சதவீத செயல்திறனும் தங்கள் தடுப்பூசிக்கு உள்ளதாக நோவாவாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், மிதமான மற்றும் தீவிரமான கரோனா பாதிப்புகளுக்கு எதிராக 100 சதவீத பாதுகாப்பை தங்கள் தடுப்பூசி அளிக்கிறது எனவும் நோவாவாக்ஸ் கூறியுள்ளது. நோவாவாக்ஸ் தனது தடுப்பூசிக்கு விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்திலும், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அவசரக்கால அனுமதி கோரி விண்ணப்பிக்கவுள்ளது. அந்த நாடுகளிலோ, ஐரோப்பிய ஒன்றியத்திலோ நோவாவாக்சிற்கு அவசரக்கால அனுமதி கிடைத்தபிறகு, அந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.