ஐநா சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாவுக்கான இந்தியப் பிரதிநிதி கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார்.
ஐநா சபையின் 75 ஆவது பொதுக்கூட்டம் உலகநாடுகளின் பங்கேற்போடு தற்போது நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக முதன்முறையாக காணொளிக்காட்சி மூலமாக இந்த கூட்டத்தை நடத்துகிறது ஐநா சபை. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மெய் நிகர் முறையில் ஏற்கனவே பேசிய காணொளிப் பதிவுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வீடியோ உரை நேற்று ஐநா கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு மீது அவர் குற்றம்சாட்டினார். அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியப் பிரதிநிதியான மிஜிடோ வினிட்டோ தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் அரசு இம்ரான்கானின் அரசு என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர் இம்ரான்கான் என்றும் தெரிவித்துள்ளார்.