பாகிஸ்தானின், கைதன்கான் புரோகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம், அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்கள், சிகிச்சை பலனின்றி அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தள்ளனர். உடல்நிலம் பாதிக்கப்பட்ட 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அனைவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பரிசோதனையில், அவர்கள் அனைவரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த இளம்பெண் மீது சந்தேகம் வர, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்ட அந்த பெண், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கோதுமை மாவில் விஷம் கலந்துள்ளார். விஷம் கலந்த அந்த கோதுமை மாவில், உணவு சமைத்து சாப்பிட்ட அந்த குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினரையே விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.