தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்களுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
இந்த கலந்துரையாடலில் தமிழக முதல்வர் பேசுகையில், ''அமெரிக்காவினருக்கு பிடித்த நாடுகளில் இந்தியா ஏழாவது பட்டியலில் உள்ளது. அதேபோல் அமெரிக்காவில் அதிகமாக குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் இந்திய மக்கள் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள். அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளிகள் உள்ளனர். இனிய இந்திய சொந்தங்களின் முகங்களை பார்க்க வந்துள்ளேன். உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா உள்ளது. ஐந்தாவது இடமாக இந்தியா உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளிகள் நிறைய பேர் இடம் பிடித்துள்ளார்கள். 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாட்டு வர்த்தகமும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இவை எல்லாம் இரண்டு நாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள்.
ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா அமெரிக்கா உறவு மிக மிக முக்கியமாக உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளிகள் இங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது உங்கள் முகத்தை பார்க்கும் போதே தெரிகிறது. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதரமாக தமிழ்நாடு இருப்பது தான் இதற்கு காரணம். 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய திட்டங்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர தொடங்கியுள்ளது. அவர்களை எல்லாம் நேரில் அழைக்க தான் நான் இங்கே வந்திருக்கிறேன். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும் என்று உங்களை உரிமையோடு கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
ஒரு செடியையோ மரத்தையோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் நட்டால் எல்லா செடியும், மரமும் அங்கு வளர்வது இல்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் நாடுகள் கடந்து வந்திருந்தாலும் மிகச் சிறப்பாக வாழ்ந்திருக்கிறீர்கள். இவையெல்லாம் நம் இந்தியருடைய பெருமை. இதுதான் அமெரிக்காவுடைய பலம். சிலர் விரும்பி வந்திருக்கலாம், சூழ்நிலைகள் துரத்தி இருக்கலாம். சிலர் வசதியான சூழ்நிலையில் வந்திருக்கலாம், சிலர் வசதி குறைவாக கூட இங்கு வந்திருக்கலாம். ஆனால் இன்று எல்லோருமே உன்னதமான இடத்தை பிடித்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் உங்களுடைய உழைப்பும் கல்வியறிவுதான்'' என்றார்.