Skip to main content

“என் நாட்டுப் பெண்களே... தயவுசெய்து...” - கண்ணீருடன் கோரிக்கை வைத்த வடகொரிய அதிபர்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

"Have more children" - North Korean leader cries in front of women

 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன், வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி மேடையிலேயே கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம்ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார். சர்வாதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் பேர் போன வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், நேற்று (05-12-23) பொதுமக்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

வடகொரியாவில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அதிபர் கிம்ஜாங் உன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கட்சி மற்றும் மாநிலப் பணிகளைக் கையாள்வதில் எனக்கு சிரமம் ஏற்படும்போது நான் எப்போதும் தாய்மார்களைப் பற்றி நினைப்பேன். நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. இது வடகொரியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை நமது நாட்டுப் பெண்களுக்கு மட்டுமே உள்ளது. 

 

பெண்கள் அதிக அளவிலான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். தாய்மையின் பலத்தை நாம் காட்ட வேண்டும். அவர்களை சிறந்த குடிமக்களாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும்” என்று பேசினார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது, கிம்ஜாங் உன் திடீரென்று கண் கலங்கினார். இதையடுத்து, அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்