கரோனாவுக்கு தடுப்பு மருந்தோ அல்லது இந்த நோயை விரட்டுவதற்குச் சிறப்பான சிகிச்சை முறையோ கண்டறியப்படவில்லை என்றால் 2022-ம் ஆண்டு வரை மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க நேரிடும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில், சமூக விலகல் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கரோனாவுக்கு தடுப்பு மருந்தோ அல்லது இந்த நோயை விரட்டுவதற்குச் சிறப்பான சிகிச்சை முறையோ கண்டறியப்படவில்லை என்றால் 2022-ம் ஆண்டு வரை மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க நேரிடும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் இந்தப் புதிய ஆய்வின்படி, "இரண்டு வகைகளில் இந்த நோய் வேகமாகப் பரவுகிறது. முதலில், தொற்று உள்ளவர்களிடமிருந்து நோய் பரவுவது ஒரு வகை. அடுத்ததாக, எதிர்ப்புச் சக்தி குறைவான, எளிதில் பாதிக்கப்படக் கூடியவருக்கு விரைவில் நோய்த் தொற்றுவது இன்னொரு முறை. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தற்போது எங்குப் பார்த்தாலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதைக் கட்டுப்படுத்த ஒரு முறை ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது.
நம்மிடையே புதிய சிகிச்சைகள் இல்லை. தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. போதுமான தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளும் இல்லை. எனவே சமூக விலகல்தான் இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. தடுப்பு மருந்தோ அல்லது இந்த நோயை விரட்டுவதற்குச் சிறப்பான சிகிச்சை முறையோ கண்டறியப்படவில்லை என்றால் 2022-ம் ஆண்டு வரை சமூக விலகலைக் கடைப்பிடிக்கவேண்டிய தேவை ஏற்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.