மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் லாகூரில் கைது செய்துள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் 28 வரை மும்பையின் 12 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். மேலும் ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்த ஹபீஸ் சயீதை இந்திய அரசின் தொடர் அழுத்தத்தால், உடனடியாக கைது செய்ய உலக நாடுகள் முயற்சித்தன. இந்த நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.