ஜப்பானில் மேற்கு பகுதியில் பெய்துவரும் கனமழையில் இதுவரை 179 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஜப்பானில் மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைபொழிவினால் நிலச்சரிவு, வெள்ளம் என தொடர் பாதிப்புகளில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
தற்போது நிலவரப்படி 179 பேர் மழை மற்றும் வெள்ள இடர்களில் சிக்கி இறந்துள்ளனர் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 50 பேரை காணவில்லை, நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டின் மேற்கூரையில் தங்கியிருக்கின்றனர். மீட்பு பணியில் 73 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் சேதத்தை ஏற்படுத்திய பேரிடராக இந்த மழை வெள்ளம் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக ஒகாயாம உள்ளது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று வெள்ள நிவாரண நடவடிக்கைளை காண ஒகாயாமவுக்கு நேரில் செல்லவுள்ளார்.