தொடர் தாக்குதல்களால் மியான்மரில் இருந்து வெளியேறும் முஸ்லீம்கள்!
மியான்மர் நாட்டில் சமீபத்தில் நடந்துவரும் இராணுவத் தாக்குதல்களால், ரோஹிங்கியா முஸ்லீம்கள் நாட்டை விட்டு வெளியேறி வங்காளதேசத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், ரோஹிங்கியா முஸ்லீம்களின் கிளர்ச்சியாளர்கள் அமைப்பான அர்ஸா, காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளைத் தாக்கினர். இதில் 12 காவலர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், கிளர்ச்சியாளர்களைத் தடுக்க இராணுவம் களமிறங்கியுள்ளது. ஆனால், தாக்குதல்கள் பொதுமக்கள் பக்கம் திரும்பியுள்ளதால் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் உள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொந்த உடைமைகளை விட்டுவிட்டு, இடம்பெயர்ந்து வருகின்றனர்.
சர்வதேச இடம்பெயர்வோர் அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இதுவரை 18,000 பேர் வங்காளதேசத்திற்கு சென்றிருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளது. சில மக்கள் இருநாட்டு எல்லைகளுக்கும் இடையில் உள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாக தற்காலிமாக தங்கியுள்ளனர். சிலர் குண்டுக் காயங்களுடன் தப்பி அந்த இடங்களுக்குச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இதுமாதிரியான தாக்குதல்கள் அங்கு அதிகரித்து வருவதாகவும், இந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 1 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இடம்பெயர்ந்து விட்டதாகவும் சர்வதேச இடம்பெயர்வோர் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்