இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி கடந்த ஆண்டு அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.
அதன்பிறகு அவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று (09.03.2021) ஹாரி - மேகன் தம்பதி, அமெரிக்க ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தனர். அப்போது மேகன், “எனக்குப் பிறக்கவிருந்த குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தில் கவலையும், பேச்சும் எழுந்தது. அரச குடும்பம் எங்களிடம் பொய் கூறியது. எங்களது குழந்தைக்குப் பட்டம் மற்றும் பாதுகாப்பு மறுக்கப்பட்டது. மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது இங்கிலாந்து அரச குடும்பத்தில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்தநிலையில் ஹாரி - மேகன் இணையின் பேட்டி குறித்து இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஹாரி - மேகன் தம்பதிகள் எழுப்பப்பட்ட பிரச்சனைகள், குறிப்பாக இனவெறி தொடர்பான குற்றச்சாட்டு (குழந்தையின் நிறத்தைப் பற்றி பேசியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு) மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணி எலிசபெத் அந்த அறிக்கையில், "கடந்த சில ஆண்டுகள் ஹாரி மற்றும் மேகனுக்கு எவ்வளவு சவாலாக இருந்தது என்பதை அறிந்து முழு குடும்பமும் வருத்தமடைகிறது. ஹாரி - மேகனால் எழுப்பப்பட்ட பிரச்சனைகள், குறிப்பாக இனம் தொடர்பானவை (சில நினைவுகள் மாறுபடலாம் என்றாலும்) மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அவை குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி (ஹாரி - மேகன் இணையின் குழந்தை) மிகவும் விரும்பப்படும் குடும்ப உறுப்பினர்களாக எப்போதும் இருப்பார்கள்" என்றும் ராணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.