இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு, பின்பு நிலவுக்கு மிக அருகில் சென்று தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், நேற்று இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இஸ்ரோவின் இந்த வரலாற்றுச் சாதனையை அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டு செய்தி வாசிப்பாளர் ஒருவர், இந்தியா இங்கிலாந்து நாட்டில் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துமாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பேட்ரிக் கிறிஸ்டி. இவர் அங்குள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று, அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சியில் சந்திரயான் 3 விண்கலம் தொடர்பாக பேசி ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், “நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் இறங்கியதற்காக இந்தியாவை நான் வாழ்த்த விரும்புகிறேன். ஆனால், 2016 - 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா இங்கிலாந்திடம் இருந்து வாங்கிய 2.3 பில்லியன் பவுண்டுகளை திருப்பி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு 57 மில்லியன் பவுண்டு பணத்தை மீண்டும் தர இருக்கிறோம். ஆனால், பிரிட்டிஷ் வரி செலுத்துவோர் அதை நிறுத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
விண்வெளி திட்டம் உள்ள நாடுகளுக்கு நாங்கள் இனிமேல் பணம் கொடுக்க மாட்டோம். விண்வெளி ஆராய்ச்சி செய்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்காக விண்கலத்தை அனுப்ப உங்களால் முடிகிறது என்றால், இனிமேல் உங்கள் தேவைக்காக நீங்கள் எங்களிடம் பணம் கேட்டு வரக் கூடாது. இந்தியாவில் 229 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஐக்கிய நாடுகள் கூற்றுப்படி, இது உலகில் எங்கும் இல்லாத அதிக எண்ணிக்கையாகும். வறுமையில் வாடும் இந்தியர்களுக்கு, அவர்களின் சொந்த அரசாங்கமே கவலைப்படாத போது நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாத பொருளாக மாறியுள்ளது.