உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த எலான் மஸ்க், தற்போது அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ட்விட்டரில் ப்ளூ டிக் வசதி கொண்ட அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதா மாதம் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “பயனாளர்களின் அதிகாரப்பூர்வமான கணக்கிற்குப் பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் வசதிக்கு இனி மதம் 8 டாலர்(ரூ.660) கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் அந்தந்த நாட்டிற்கு ஏற்றவாறு மாறுபடும். ப்ளூ டிக் பயனாளர்களுக்கு பதில்கள், தேடல் எனப் பலவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும். ட்விட்டரில் வீடியோ மற்றும் ஆடியோ பகிரப்படும் நேரம் அதிகரிக்கப்படும் வசதியும், அதில் பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டணம் சிறந்த கன்டென்ட்டுகளை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாக பகிரப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சில நாடுகளில் மட்டும் ப்ளூ டிக் பயன்படுத்தும் பயனாளர்களிடம் மாதக் கட்டணமாக ரூ. 400 வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ப்ளூ டிக் கணக்கிற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயனாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது புதிதாக வந்திருக்கும் கட்டண முறை இந்தியப் பயனாளர்களுக்கு எவ்வளவு என்று இனி வரும் காலங்களில் தெரியும் எனக் கூறப்படுகிறது.