சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிழக்கு கவுட்டா பகுதி, ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரிய ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் சிரிய ராணுவம் ரஷ்யாவின் உதவியோடு வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதல்களின் போது கிட்டத்தட்ட 1,500 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அதில் கணிசமானோர் குழந்தைகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிரியா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு கவுட்டா தங்களது கட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழு ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த டமாஸ்கஸ் நெடுஞ்சாலை மீண்டும் பயனுக்கு வந்துள்ளது. என்னதான் இந்த வெற்றியை சிரிய அரசு கொண்டாடினாலும், இந்த அதிகார மோகத்திற்காக சிரிய பொதுமக்கள் இழந்ததுதான் அதிகம் என்பதே சர்வதேச சமூகத்தின் எண்ணமாக இருக்கிறது.