ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானியல் முகமை தெரிவித்திருந்த நிலையில், சுனாமிக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ள இந்தத் திடீர் நிலநடுக்கத்தால் 90 பேர் இதுவரை காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக பொன்சோ தீவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 20 லட்சம் வீடுகள் மின்சார சேவை இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக பல நகரங்களில் ரயில் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவரை பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது ஜப்பான் அரசு. ஜப்பான் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஸ்காட் மற்றும் இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் சிறிது நேரம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இப்படி ஒரே நாளில் மூன்று இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.