கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், ட்ரம்பின் அனைத்துக் கணக்குகளையும் முடக்கின. ட்விட்டர் நிறுவனம் அவருக்கு நிரந்தர தடை விதித்தது. பேஸ்புக் நிறுவனம் ட்ரம்பிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இதனையடுத்து டொனால்ட் டிரம்ப் தற்போது, 'ட்ரூத் சோசியல்' என்ற பெயரில் தனது சொந்த சமூகவலைதளத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக 'ட்ரூத் சோசியலை உருவாக்கியதாக "ட்ரம்ப் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், "தலிபான்கள் அதிகமாக ட்விட்டரில் இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம், ஆனால் உங்களுக்குப் பிடித்த அமெரிக்க அதிபர் மவுனமாக்கப்பட்டார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது" எனவும் ட்ரம்ப் கூறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும், தொடக்க நிலையில் உள்ள இந்த சமூகவலைதளத்தின் அணுகல் வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.