ட்விட்டரில் 'சிலோன் மஸ்க்' என்ற பெயர் ட்ரெண்டாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் 9% பங்குகளை வாங்கி அதிர்வலைகளை ஏற்படுத்திய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், மொத்த நிறுவனத்தையுமே 43 பில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே சிலோன் மஸ்க் என்ற பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மொத்த கடனே 45 பில்லியன் டாலர் தான் என்றும், ட்விட்டரை 43 பில்லியன் கொடுத்து வாங்குவதைவிட, கூடுதலாக இரண்டு பில்லியனைச் சேர்த்தால் இலங்கையே வாங்கி விடலாம் என்றும் இலங்கை சமூக வலைதளவாசிகள் பதிவிடத் தொடங்கினர்.
இலங்கையின் கடனை அடைத்து நாட்டையே வாங்கி விட்டால், தனது பெயரை சிலோன் மஸ்க் என்று கூட மாற்றிக் கொள்ளலாம் என்றும் சமூக வலைதளவாசிகள் பரிந்துரைத்தனர். இலங்கையை வாங்கி அந்நாட்டின் பெயரையே 'ஸ்ரீஎலோன்கா' என்று மாற்றிவிடலாம் என்றும் சிலர் பதிவிட்டனர். இதனால் ட்விட்டரில் சிலோன் மஸ்க் ட்ரெண்டானது.