உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துவரும் கரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது மிகவும் அவசியமாக உள்ளது. கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்பிறகு, கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததோடு, உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இதன்தொடர்ச்சியாக, இஸ்ரேல் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டதையடுத்து, பொதுவெளியில் முகக்கவசம் அணிவதிலிருந்து நாட்டு மக்களுக்கு விலக்கு அளித்தது இஸ்ரேல். இஸ்ரேலைத் தொடர்ந்து அமெரிக்காவும் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் இனி முக்கவசம் அணிய வேண்டியதில்லை என அறிவித்தது.
இந்தநிலையில் தென்கொரியா, கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக்கொண்டிருந்தாலும், இனி பொதுவெளியில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. மேலும், தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் செலுத்திக்கொண்டவர்கள், பொதுவெளியில் அதிகளவு கூடவும் தென்கொரியா அனுமதியளித்துள்ளது. வயதானவர்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தும் விதமாக அந்தநாடு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தென்கொரியா வரும் நவம்பர் மாதத்திற்குள் தனது மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதின் மூலம் கரோனாவிற்கு எதிராக சமூக எதிர்ப்பு சக்தியை அடைய திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.