டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வருடா வருடம் மே மாதம் 18ஆம் தேதி நடைபெறும். இந்த இரங்கல் கூட்டத்தில் எப்போதும் வழக்கறிஞர் ராம்சங்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்துகொள்வர். ஆனால், தற்போது இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிவருவதால், இந்த முறை இக்கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, லண்டனில் உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பாக இங்கிலாந்து எம்.பி க்கள் பங்கேற்போடு நடைபெறும் நிகழ்வில் வழக்கறிஞர் ராம்சங்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக இருவரும் இதில் கலந்துகொள்ளவில்லை. அதனால், அவர்கள் இவ்விரங்கல் கூட்டத்திற்கு தங்களது இரங்கலை ஒலி வடிவில் அனுப்பியுள்ளனர்.
இதில் இரங்கல் தெரிவித்திருக்கும் வழக்கறிஞர் ராம்சங்கர், “உலகம் இந்த மே மாதத்தை, உலக தொழிலாளர்கள் தினம் (மே,1), உலக பத்திரிகை சுதந்திர தினம் (மே,3), உலக விளையாட்டு தினம் (மே,7) , உலக செஞ்சிலுவை தினம் (மே,8) , உலக தாய்மார்கள் தினம் (மே,10), உலக செவிலியர்கள் தினம் (மே,12) உலக ஆயுதப் படைகள் தினம் (மே, 16) உலக தகவல்தொடர்பு தினம் (மே, 17) எனக் கொண்டாடுகிறது. ஆனால் நாம் இலங்கையில் நமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18-யை மெல்ல மெல்ல மறந்து வருகிறோம். உலகம் முழுவதும் நம் தமிழ் மக்கள், குறிப்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் இதை மறப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை, உலக மனித உரிமைகள் ஆணையம் உட்பட பல்வேறு நாடுகள் இந்த தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசும் அதன் பொறுப்பாளர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உலகளாவிய போர்க் குற்றச் சட்டங்களின் படி தண்டனை தரவேண்டும் என்பது உலகின் பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து 11 ஆண்டுகளாக வலியுறுத்துகிறது. ஆனால் 11 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை மற்றும் வேதனை.
இந்த இனப் படுகொலைக்கு இந்திய ராணுவத்தின் மறைமுக பங்கு உள்ளதைக் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நான் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் அதன் மீதான எனது மனுவை இன்னும் விசாரித்து வருகிறது இந்திய அரசாங்கம். என் மனுவை இந்தியப் பிரதம அலுவலகம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது , உள்துறை அமைச்சகம் ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பியது. இப்படியே மாறி மாறி 2015 முதல் கடித போக்குவரத்து மட்டுமே நடந்துகொண்டு உள்ளது என்பது வேதனை.
தமிழ் மக்களே நாம் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறோம். அதுவும் நல்ல நிலையில் அனைத்து துறையிலும் கால்பதித்து அதிகார மையத்தில் உள்ள தமிழர்களும் உள்ளோம். எனவே லட்சக் கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை மனதில் கொண்டு அவர்கள் ஆன்ம சாந்தி அடைய நாம் ஒன்று இணைந்து நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த முள்ளி வாய்க்கால் தினத்தைத் துக்க நாளாக அனுசரிக்காமல் அதற்கு காரணமானவர்களைத் தண்டிக்கவும் தமிழர்களின் கனவு தேசம் மெய்ப்படவும் இறைவனைப் பிரார்த்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா வெளியிட்டுள்ள செய்தியில், "என் இதயத்தில் மிகப்பெரிய வலியுடன் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் உங்களுடன் பேசுகிறேன். ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக, இந்த பிரச்சனை குறித்து நான் பல முறை குரல்கொடுத்துள்ளேன், அதன்மூலம் இலங்கைத் தமிழர்கள் சந்தித்த கொடுமைகள் குறித்த உண்மையின் பக்கம் இந்திய மக்களின் கவனத்தையும், இந்திய நாடாளுமன்றத்தின் கவனத்தையும் திருப்பியுள்ளேன். இலங்கையின் அண்டை நாடாக, போர்க் காலத்தில் அங்குள்ள மக்களுக்கு என்ன கொடுமைகள் நடக்கின்றன, நடந்தன என்பதை இந்தியா அறியச்செய்தோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகமோசமான ஒரு சம்பவமாக இது இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இன்றும் கூட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் தங்களது கணவருக்கோ, தந்தைக்கோ அல்லது தனது சகோதரருக்கோ என்ன நேர்ந்தது என்பதைக் கூட தெரிந்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமிழ மக்களின் நலன்களை இலங்கை ராணுவம் அபகரித்துக்கொண்டது. இன்றளவும் கூட தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துக்கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட ஜஃப்னா பல்கலைக்கழகத்திலிருந்த நினைவிடம், முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சமத்துவமோ, அடிப்படை உரிமைகளோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்சனையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் மிக முக்கியமானது. அது இனியும் தொடரும். உண்மை நிச்சயம் வெல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.