கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் உடல்நிலை மோசமானதால், அவர் சாதாரண வார்டிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசுத் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளது. மேலும், 2,86,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்த வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் 47,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 4,900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், அந்நாட்டின் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரையும் இந்த வைரஸ் தாக்கியது.
இந்தச் சூழலில், போரிஸ் ஜான்சன் கடந்த 10 நாட்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு,சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமானதால் அவர் புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றினர். போரிஸ் ஜான்சனுக்கு அங்குத் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,அவரது பொறுப்புகள் அனைத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.