ஆற்றுக்குள் வழிதவறி வந்த திமிங்கலத்தை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட பொழுதும் முடியாததால் கருணை கொலை செய்த நிகழ்வு பிரான்ஸில் நடந்துள்ளது.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஆர்டிக் கடல்பரப்பை நோக்கி சென்ற 'பெலுகா' என்ற வகையை சேர்ந்த திமிங்கலம் ஒன்று வழிதவறி செயின் ஆற்றுக்குள் புகுந்தது. பொதுவாக கடல்நீரில் வசிக்கும் திமிங்கலம் நன்னீருக்கு வந்ததால் உணவின்றி தவித்து வந்தது. இதனால் அதன் உடல் எடை குறைந்தது. தொடர்ந்து உயிர்க்கு போராடி வந்த அந்த திமிங்கலத்தை கடலில் விட அதிகாரிகள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. இறுதி முயற்சியாக 700 கிலோ எடை கொண்ட அந்த திமிங்கலத்தை ராட்சத வலை மூலம் பிடித்து கண்டெய்னர் லாரியில் வைத்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு உப்புநீர் ஏரியில் விட முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திமிங்கலத்திற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு துடிதுடித்ததால் அதனை கால்நடை மருத்துவர்கள் கருணை கொலை செய்தனர்.