பெண் எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்துப் பேசியது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி. லிடியா தோர்ப் என்பவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டடம் பெண்களுக்கு பாதுகாப்பான கட்டடம் அல்ல. இங்கு பெண்கள் பணி செய்வதற்கு உகந்த இடம் இல்லை. கட்டடத்தின் மாடிப் படிகளில் நடந்து வர முடியவில்லை. இவ்வாறு நடந்து வரும்போது தகாத இடத்தில் என்னை தொட்டார்கள். இந்த செயலை நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த மனிதர்கள் செய்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வான் என்னிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டார்.
நாடாளுமன்றத்தின் அலுவலக வாயிலுக்கு வெளியே நடந்து செல்ல பயந்தேன். நான் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் முன் அலுவலகக் கதவைத் திறந்து நான் செல்லக்கூடிய வழியில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பிறகு தான் செல்வேன். ஏனெனில் நான் நடந்து செல்லும் போதெல்லாம் யாராவது ஒருவர் எனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தபடி இருந்தனர். மேலும் அத்துமீறி என்னை விடாமல் பின் தொடர்ந்து வந்து உடலைத் தொடுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன். இது மட்டுமின்றி வாய் மொழியாகப் பாலியல் ரீதியான கிண்டலுக்கும் உள்ளானேன். இதேபோன்று இங்கு பல பெண்களுக்கும் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் பதவிக்காக இதைப் பற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்" எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
பெண் எம்.பி. லிடியா தோர்ப்பின் இந்த பேச்சு, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வான் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளால் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போய் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரத்தில் லிபரல் கட்சி, டேவிட் வான்-ஐ சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.