ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்களது இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்துவருகின்றனர். இருப்பினும் தலிபான்களின் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. இந்தநிலையில், தலிபான்கள் காபூலில் உள்ள விமான நிலையத்தை மீண்டும் பழையபடி செயல்பாட்டிற்கு கொண்டுவர முயற்சித்துவருகின்றனர்.
அண்மையில் தலிபான்கள், காபூலுக்கு வர்த்தக விமானங்களை இயக்குமாறு இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்தக் கோரிக்கையை இந்தியா பரிசீலித்துவருகிறது. இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பயணம் மேற்கொள்வதற்கான விமான டிக்கெட்டின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்பு பாகிஸ்தானுக்குச் சென்று திரும்புவதற்கான டிக்கெட்டின் விலை சுமார் 300 டாலராக இருந்த நிலையில், தற்போது ஒருமுறை பாகிஸ்தான் செல்வதற்கான டிக்கெட்டே 1,200 டாலர் முதல் 2,400 டாலர் வரை விற்கப்படுகிறது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் சிவில் ஏவியேஷன் ஆணையம், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்தையும், தங்கள் நாட்டின் காம் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு காபூல் - இஸ்லாமாபாத்திற்கு இடையேயான விமான கட்டணத்தை ஆகஸ்ட் 15க்கு முன்பிருந்த அளவுக்கு குறைக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் காபூலுக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையிலான விமானங்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், காபூலுக்கு விமான சேவை துண்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆப்கான் அதிகாரிகளின் கடும் நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.