மியான்மார் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதாக ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மார் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தற்போதைய தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடு முழுவதும் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிய சுமார் ஒருவார காலம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. இந்த சூழலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதாக ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், அவர்களுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது எனக் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்த சூழலில், முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்னரே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.