கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் அக்டோபர் மாதம் 03 ஆம் தேதி முதல் 05 வரை 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாகச் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்து கொள்கிறார். இவருடன் சட்டமன்றச் செயலாளர் கி. சீனிவாசன் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராகக் கலந்து கொள்கிறார். மேலும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் பத்ம குமாரும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (26.09.2023) காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் பின்பு அக்ரா நகருக்கு 03.10.2023 அன்று சென்றடையவுள்ளனர். இதையொட்டி பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று துபாய் வழியாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார். கெய்ரோவில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு இன்று (27.9.2023) அந்நாட்டின் செனட் துணை சபாநாயகர் பாஹா எல்டின் ஸுக்கா, தலைமையில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் இந்த கூட்டத்தில், அந்நாட்டின் செனட் செகரட்டரி ஜெனரல் முகம்மது இஸ்மாயில் இட்மேன், இந்திய தூதர் அஜித் குப்தா, அசாம் சட்டப் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு இந்த கூட்டத்தில் பேசுகையில், “எகிப்தில் முதன் முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் வடக்கில் சிந்து சமவெளி நாகரீகமும், தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானது. அதேபோல், தொன்மையான மூன்று மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த பழமையான மொழி இன்றும் இளமையுடன் உள்ளது. நாளையும் இது தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, காலநிலை மாற்றத் தாக்கத்தை குறைத்திடவும், வனங்களைப் பாதுகாத்திடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார். அதே சமயம் 66வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 07.10.2023 காலை 08.25 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.