மருந்து இறக்குமதியை மனதில் வைத்தே சீனா கரோனாவின் தீவிரம் குறித்து உலக நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என அமெரிக்கப் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹானில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டால், ஜனவரிக்குப் பிறகே இதன் பரவல் உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் சீனாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சீனா முன்கூட்டியே இந்தப் பரவல் குறித்து உலக நாடுகளை எச்சரித்து இருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பை உலகம் சந்தித்திருக்காது எனக் கருத்துகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க உள்துறையின் கீழ் செயல்படும், பாதுகாப்புப் புலனாய்வுத் துறையினர் கரோனா வைரஸ் குறித்து தீவிர விசாரணை மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில், "கரோனா வைரஸின் தீவிரத்தைச் சீனத் தலைவர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மறைத்துவிட்டனர். கடந்த ஜனவரி மாதமே வைரஸின் தீவிரத்தைச் சீனா தெரிவித்திருந்தால், இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், கரோனா வைரஸின் தீவிரத்தை அறிந்திருந்த சீனா, மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியைக் குறைத்ததோடு, மருந்து இறக்குமதியை அதிகரித்துள்ளது. குறிப்பாக முகக் கவசங்கள், கையுறைகள், மருத்துவக் கவச உடைகள், மருத்துவப் பொருட்களைச் சீனா அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் சீனாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் திடீரென பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. இது வழக்கமானதாகத் தெரியவில்லை. எனவே, கரோனா வைரஸின் தீவிரத்தைச் சீனா நன்கு அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.