இந்தியாவில் சிக்கியுள்ள அமெரிக்கர்களில் பெரும்பாலானோர், தற்போதைய சூழலில் அமெரிக்காவுக்குச் செல்வதைத் தவிர்த்து இந்தியாவிலே தங்கியிருக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டு, வெளிநாட்டு மக்களை அவர்களின் தாய்நாட்டிற்கு அனுப்புவதற்கான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் சிக்கியுள்ள அமெரிக்கர்களின் பெரும்பாலானோர், தற்போதைய சூழலில் அமெரிக்காவுக்குச் செல்வதைத் தவிர்த்து இந்தியாவிலே தங்கியிருக்க விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா கரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்தியாவில் தங்கியிருப்பதையே அமெரிக்க மக்கள் விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லீ தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவுடனான சிறப்பு விமானம் குறித்து நாங்கள் பேச ஆரம்பித்த போது ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பத் தயாராக இருந்தனர். ஆனால் இப்போது, 'விமானம் அமெரிக்கா வரத் தயாராக உள்ளது, நீங்கள் வருகிறீர்களா?' எனக் கேட்டால் யாருமே வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. 800-அமெரிக்கர்களைத் தொடர்புகொண்டதில் 10 பேர் மட்டுமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பச் சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும், இந்தியாவில் உள்ள 24,000 அமெரிக்கர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.