கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல் போன்ற நரம்பியல் அறிகுறிகள் தென்படக்கூடும் என ஆய்வு முடிவு ன்று தெரிவிக்கிறது.
சீனாவின் வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இதுவரை பலி வாங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக உலகின் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள், ஏழை நாடுகள் எனப் பாகுபாடின்றி அனைத்து நாடுகளையும் முடக்கிப்போட்டுள்ள இந்த கரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘அன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி’ இதழில் கரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல் போன்ற நரம்பியல் அறிகுறிகள் தென்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை கரோனா அறிகுறிகளாகப் பார்க்கப்பட்டாலும், இதனைக் கடந்து கரோனா நோயாளிகளில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனச் சிதறல், வாசனை மற்றும் சுவை அறிதலில் ஏற்படும் கோளாறுகள், வலிப்பு, பக்கவாதம், பலவீனம் மற்றும் தசை வலி போன்ற நரம்பியல் பிரச்சனைகளைக் கொண்டுள்ளனர் என இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம் எனவும், மூளை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலையும் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.