சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதியவகை வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இதுவரை மருந்து ஏதும் கண்டறியப்படாத சூழலில், இதேபோன்ற மற்றொரு வைரஸ் வகை சீனாவில் பன்றிகளிடையே தற்போது பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய உயிர்கொல்லி வைரஸான H1N1 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸுக்கு G4 EA H1N1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 வைரஸின் மறுபணுத்தொடரை கொண்டுள்ள இந்த வைரஸால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், வருங்காலத்தில் இது மனிதர்கள் மத்தியில் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்க மிகவும் அவசியமான அனைத்து முக்கிய அடையாளங்களையும் கொண்டுள்ளது" என்று திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், சீனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் தெரிவித்துள்ளன. இக்காய்ச்சல் கரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.