இந்தியாவுடன் அதிகமான மோதல் போக்கை விரும்பவில்லை என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமலிருந்த சீனா முதன்முதலாக இதுகுறித்து பேசியுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான், பெய்ஜிங்கில் பேட்டியளிக்கையில், "கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுக்கும் இறையாண்மை உள்ளது. எல்லை தொடர்பான எண்களின் விதிமுறைகள் மற்றும் தளபதி மட்ட பேச்சுவார்த்தைகளின் ஒருமித்த கருத்து ஆகியவற்றை இந்திய ராணுவம் மீறியது.
இந்தியா தனது ராணுவத்தை ஒழுங்குபடுத்தவும், எங்களுக்கு எதிரான ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தவும், சீனாவுடன் இணைந்து செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளை தீர்ப்பதற்கான சரியான முடிவுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அரசாங்க மற்றும் இராணுவ மட்டத்தில் தொடர்ந்து பேசி வருகிறோம். அங்கு நடந்ததில் சரி எது, தவறு எது என்பதைத் தெளிவாகக் காணலாம். எல்லையின் சீனப் பக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் சீனாவைக் குறை சொல்ல முடியாது. சீனத் தரப்பிலிருந்து, மேலும் மோதல்களைக் காண நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.