ஹெச்- 1பி உள்ளிட்ட விசாக்களை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவை அமல்படுத்த அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலால் தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள சூழலில், கடந்த ஐந்து மாதங்களில் அமெரிக்காவில் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த சூழலில் உள்நாட்டினருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், H1B, H2B, H4, L1, J1 உள்ளிட்ட விசா வகைகளின் பயன்பாட்டை இந்த ஆண்டு இறுதி வரை அதிபர் ட்ரம்ப் தடை செய்து அறிவித்தார். அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான இந்த விசாவில் சுமார் 74 சதவீதம் வரை இந்தியர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் இதனால் பயன்பெறும் லட்சக்கணக்கான இந்தியர்களும், அவர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியது.
ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்து வந்த வடக்கு கலிபோர்னியாவின் மாவட்ட நீதிபதியான ஜெப்ரி வைட், அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்துள்ளார். ட்ரம்ப்பின் உத்தரவுக்கு விதிப்பட்ட இந்த தடையானது அமெரிக்காவில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.