ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நுழைந்த நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது தலிபான். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதால் அமெரிக்கர்களை மீட்டு வருகிறது அந்நாட்டு ராணுவம். அதேபோல், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூல் தூதரகத்தில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேறியதாக தகவல் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்ற நிலையில், ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான இடங்களை தலிபான்கள் கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று (15/08/2021) தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அதிகாரத்தையும் கைப்பற்றியது. அரசுப் படைகள் முற்றிலும் சரணடைந்ததால் தலிபான்கள் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின் தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது தலிபான்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க அரசுப் படைகளுக்கு அதிபர் அஷ்ஃரப் கனி அறிவுறுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தலிபான்களுடன் பேசி அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் கூறுகின்றன.