பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.
அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமராவை பரிசாக அளித்தார். ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பை பிரதமர் மோடிக்கு ஜில் பைடன் பரிசாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஜில் பைடனுக்கு மோடி 7.5 கேரட் பச்சை வைரத்தைப் பரிசாக வழங்கினார். அதிபர் பைடனுக்கு வெள்ளி விநாயகர் சிலையுடன் கூடிய சந்தனப் பேழையைப் பரிசாக வழங்கினார். இந்திய உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பிரதமர் மோடி, அதிபர் பைடனுக்கு வழங்கினார்.
பிரதமர் வழங்கிய சந்தன பேழை, கர்நாடகத்தில் இருந்து பெறப்பட்ட சந்தன மரங்களால் ராஜஸ்தானை சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தன பேழையில் 10 விதமான பரிசுப் பொருட்கள் சிறிய வெள்ளிப் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தது.