வங்கதேசத்தில் 6 மாடி கட்டிடத்தில் குண்டு வெடிப்பு: தீவிரவாதி 7 பேர் பலி
வங்கதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவோடு நியோ-ஜே.எம்.பி. என்னும் தீவிரவாத அமைப்பு இயங்கிவருகிறது. இந்த அமைப்பு அந்நாட்டின் மிகப்பெரிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாகும். இந்த தீவிரவாதிகள் அந்நாட்டில் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டாக்கா அருகில் உள்ள தங்கைல் பகுதியில் சிறிய விமானம் மூலம் உளவு பார்க்க முயன்ற இரண்டு தீவிரவாதிகளை ராணுவத்தினர் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மிர்பூர் பகுதியில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த கட்டிடத்தில் ஒரு தீவிரவாதி இருந்துள்ளான். ராணுவத்தினர் வருவதை அறிந்து கொண்ட அவன் தனது வீட்டில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.
இந்த குண்டுவெடிப்பில், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விசாரணையின் போது அந்த தீவிரவாதியின் பெயர் அப்துல்லா என்பதும், அவன் நியோ-ஜே.எம்.பி. அமைப்பின் தலைவன் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அவன் அந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மின்சாதன கடை நடத்தி வந்துள்ளான் என்பதும் விசாரனையில் தெரியவந்துள்ளது.