பிரான்ஸ் நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 46 வயதான இமானுவேல் மேக்ரானின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் பிரதமராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு எலிசபெத் போர்ன் என்ற பெண் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், அரசு கொண்டு வந்த சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் எதிரொலியாக, பிரான்ஸில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேக்ரான் அரசு தோல்வி அடைந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் மேக்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது.
இந்த நிலையில், பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை நேற்று முன்தினம் (08-01-24) ராஜினாமா செய்தார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் (34) பெயரை அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று (09-01-24) அறிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்கும் கேப்ரியல் அட்டல், தன்னை வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அறிவித்துக்கொண்டவர். மேலும், நாட்டின் முதல் தன்பாலீர்ப்பாளர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். முன்பு, பொதுவுடைமை கட்சியில் இருந்த கேப்ரியல், 2016 ஆம் ஆண்டில் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.